புது தில்லி, மார்ச் 3: வணிக நோக்கத்துக்காக கவிதை எழுதுவது பாவமில்லை. ஆனால், அதற்காக கவிஞர்கள் எல்லாவற்றையும் சமசரசம் செய்துக் கொள்ளக் கூடாது என்று கவிஞர் சச்சிதானந்தன் வலியுறுத்தினார்.
சாகித்ய அகாதெமியில் நடைபெற்ற இந்தியன் ஓஷன் ரிம் அசோசியேஷன் கவிதை விழா நிறைவுநாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 19 நாடுகளிலிருந்து 50 கவிஞர்கள் பங்கேற்றனர்.
விழாவில் கவிஞரும், கேரள சாகித்ய அகாதெமி விருதை 7 முறை பெற்றவருமான கே. சச்சிதானந்தன் பேசுகையில், தற்போதை சூழலில் கவிதை எழுதுவதில் சுதந்திரம் என்பது சவாலாக உள்ளது. அதைவிட தங்களுக்கு உண்மையாக இருப்பதும், புதி புதிதாகப் படைப்பதும் கவிஞர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. வணிக நோக்கத்துக்காகவும், தேவைக்காவும் கவிஞர் கவிதை எழுதுவது பாவமல்ல. ஆனால், அச்சத்தின் காரணமாக ஒரு கவிஞர் தற்கொலைக்குச் சமமான சமரசங்களை செய்துகொள்வதோ, எந்தப் பதிப்பகத்தாரும் வெளியிட முன்வராத அளவுக்கு எழுதும் துணிச்சலோ ஒரு கவிஞருக்குத் தேவையற்றவை என்றார் சச்சிதானந்தன்.
கவிஞர் பார்வதி அரசநாயகம் பேசுகையில், இலங்கையில் 80-களில் நடைபெற்ற இனக் கலவரத்தின் போது கவிதை எழுதத் தொடங்கினேன். அகதிகள் முகாமில் அமர்ந்து கொண்டுதான் எனது முதல் கவிதையைப் படைத்தேன். அவ்வாறு எழுத்தப்பட்ட கவிதை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அமைதியாக இருப்பதைவிட ஏதாவதொன்றைப் பதிவு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்றார்.
கவிஞர் அருந்ததி சுப்பிரமணியம் பேசுகையில், ஜனநாயகமாக்கப்பட்ட கலாசாரத்துக்கான இடத்தை இணையதளம உருவாக்கியுள்ளது. கவிதை என்பது சிலருக்குத்தான் என்பதை மன திறந்து ஒப்புக்கொள்கிறேன். கவிதை தொடர்பாக நடத்தப்பட்ட அமெரிக்க ஆய்வில் கவிஞர்கள் சீக்கிரமே மரணமடைந்து விடுகின்றனர். ஆனால், அக் கவிஞர்களின் படைப்புகள் சாகா வரம் பெற்று ஜீவித்து இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது என்றார்.

0 comments :
கருத்துரையிடுக