தெருவெல்லாம் தமிழ் முழக்கம் என்ற பாரதியின் கனவை நனவாக்க ஊருக்கு ஊர் இலக்கிய அமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.
வாணியம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் மன்றத்தின் 22-ம் ஆண்டு இலக்கிய விழாவில் அவர் தொடக்கவுரையாற்றியது:
இன்றைய ஊடகங்கள் வியாபார நோக்கில் தமிழை வளர்ப்பதற்கு பதில் சிதைப்பதற்கு போட்டிப் போட்டிப் போடும் நிலையே காணப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களை சென்றடையச் செய்யும் வாய்ப்பை பெற்ற அவற்றுக்கு, ஆங்கில வார்த்தைகளுக்கும், வடமொழி சொற்களுக்கும் நிகரான தமிழ் சொற்களைக் கொண்டுச் செல்லும் எண்ணமோ, முனைப்போ இலலை.
பல்கலைக் கழகங்களாலோ, பத்திரிகைகளாலோ, அரசியல் தலைவர்களாலோ செய்யமுடியாத, பாரதி கண்ட தெருவில்லாம் தமிழ் முழக்கத்தை முத்தமிழ் மன்றம் போன்ற இலக்கிய அமைப்புகளால் மட்டுமே செய்ய முடியும்.
இன்னமும் தமிழகத்தில் தமிழ் இருப்பதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்பவையாக ஆங்காங்கே இருக்கும் முத்தமிழ் மன்றங்கள், திருவள்ளுவர் கழகங்கள், திருக்குறள் மன்றங்கள், கம்பன் கழகங்கள், சிலப்பதிகார மன்றங்கள், இளங்கோவடிகள் மன்றங்கள் போன்றவை உள்ளன.
இலக்கிய அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு இளைஞர்கள் வரவில்லையே என வருத்தப்பட வேண்டியது இல்லை. நாமும் இளைய வயதில் சினிமா ஆர்வத்தில் இருந்தவர்கள்தான். ஆகையால், இன்றைய இளைஞர்கள் 45 வயதை கடக்கும்போது தமிழ் அவர்களை கொண்டு வந்து இலக்கிய அமைப்புகளிடத்தில் சேர்த்துவிடும்.
ஆன்மிகமும், மொழியும் எப்போதுமே ஒரு மனிதனை அவனது 45 வயதுக்கு மேல்தான் ஈர்க்கும்.
இன்றைக்கு குழந்தைகள் ஆங்கிலக் கல்வி மட்டுமே கற்கும் நிலையும், தாய்மொழி தெரியாத காலக் கடத்திலும் உள்ளன. இதனால் முத்தமிழ் மன்றம் போன்ற அமைப்புகள் ஊருக்கு ஊர் உருவாகக் கூடிய அவசியமும், கட்டாயமும் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்தான் உன் தாய் மொழி என்று எடுத்துச் சொல்வதற்கு ஊர்தோறும் இலக்கிய மன்றங்கள், இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியை வளர்க்கவும், காப்பாற்றவும் முடியும்.
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
சென்னை மாநகராட்சி அம்மா திரையரங்குகள் அமைப்பதாக அறிவிப்பு வந்துள்ளது நல்ல விஷயம்தான். அதேபோல் இளைஞர்களுக்காக விளையாட்டரங்கங்கள் அமைப்பதும் அவசயமானதுதான்.
திரையரங்கங்கள், விளையாட்டரங்கள் அமைக்கப்படுவதுபோல், ஒவ்வொரு பேரூராட்சி, ஒன்றிய அளவில் இலக்கிய அமைப்புகள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் சிற்றரங்கங்களை அமைத்துத் தர அரசு முன் வர வேண்டும்.
இதன் மூலம் அவை மாதம்தோறும் இலக்கிய கூட்டங்களை நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் பாரதி கண்ட கனவான தெருவெல்லாம் தமிழ் முழக்கம் நனவாகும்.
10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் இலக்கிய அமைப்புகளுக்கு அரசு ஆண்டுதோறும் மானியம் அல்லது நிதியுதவி வழங்க முன் வரவேண்டும். அதன் மூலம் அவை தொடர்ந்து இதுபோன்ற கூட்டங்களை நடத்த முடியும்.
மேடைப் பேச்சாளர்களுக்கு இறைவன் தமிழையும், பேச்சாற்றலையும் தந்துள்ள நிலையில், பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தமிழை வளர்ப்பதற்கும் உங்கள் அறிவும், ஆற்றலும் பயன்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.
0 comments :
கருத்துரையிடுக