வாணியம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தில் நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெற்ற பாங்கறி மண்டபம் நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு மிகுதியான தகுதி சேர்த்தது இயலே எனும் தலைப்பில் பேரா.அப்துல்சமது, நாடகமே எனும் தலைப்பில் பேரா.பார்த்திபராஜா, இசையே எனும் தலைப்பில் புலவர் மாது ஆகியோர் வாதிட்டு பேசினார்.
மூவரின் வாதங்களுக்கு பின்பு நாஞ்சில் சம்பத் பேசுகையில், தமிழ்நாட்டில் உயிரை தந்து இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போதும் தேநீர் கடைகளில் இந்தி பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். பண்ணைபுரத்து இசைவேந்தன் இளைராஜா வந்து நாடோடி பாட்டிக்கு உயிர் கொடுத்த பின்பு இங்கு மண்டி இருந்த இந்தி சத்தமில்லாமல் வெளியேறியது. ஒரு போராட்டத்தால் விரட்ட முடியாத இந்தியை இசையால் விரட்ட முடிந்தது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கரை பெற்று அமெரிக்காவில் தமிழில் பேசிய போது உலகத்தின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பாமர மக்களுக்கு தமிழை சேர்க்கு எளிய ஊடகமாக இருப்பது நாடகம். நாடகத்தின் தந்தை பம்மல்சம்பந்தம்முதலியார் நாடக கலைக்கு உயிர் தந்தார். அதை மக்களின் கலையாக மடை மாற்றம் செய்தார் கலைவானர் என்.எஸ்.கே. அதனையே பகுத்தறிவு எனும் ராஜாபாட்டையில் எடுத்து சென்றார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. தணிக்கையில்லாமல் நாடகத்தை அனுமதித்தால் நாளையே திராவிட நாடு கிடைக்க செய்ய முடியும் என்றார் அறிஞர் அண்ணா. இசைக்கு வல்லமை இருக்கிறது. நாடகத்திற்கு இந்த நாட்டின் தலைவிதியை மாற்றக்கூடிய வல்லமை இருக்கிறது. ஆனால் இத்தாலி நாட்டவரான ஜோசப் கான்ஸ்டென்பெஸ்கியை வீரமாமுனிவராக மாற்றியது இயல்தமிழே. தமிழ் இலக்கியங்களை படித்த பின் தமிழுக்கு செம்மொழிக்கான தகுதியுள்ளது என்றார் கால்டுவெல். லண்டனிலிருந்த வந்த ஜி.யூ.போப் திருக்குறள், திருவாசகம், நாலாயிரம் திவ்வியபிரபந்தம் படித்தப்பின் உலகில் எந்த மொழியிலும் இல்லாத பக்தி, அறம் சார்ந்த இலக்கியங்கள் தமிழில் உள்ளது என்று கூறி தனது கல்லறையில் இங்கே தமிழ் மாணவன் ஒருவன் தூங்குகின்றான் எழுதி வைக்க சொன்னார். ஆகவே ஒரு மொழி அதன் தகுதி எப்போது உயரும் என்றால் கடல் கடந்து எல்லை தாண்டி வேற்று மொழிக்காரனும் ஒப்புக் கொள்ள வைத்தது இசை காட்டிலும், நாடகத்தை காட்டிலும் இயலே ஆகும்.
ஆகவே தமிழுக்கு சுருதி சேர்ந்தது இசை. தமிழை மக்கள் மன்றத்தில் எளிதில் சேர்த்து நாடகம். ஆனால் தமிழுக்கு தகுதி மிகுதி சேர்த்தது இயலே என்றார்.
0 comments :
கருத்துரையிடுக