ads

தமிழ் அறிவோம்

தமிழில் வெளிவந்த பத்திரிகையின் பெயரே, தமிழ் மேகசின் என்பதாக இருக்கிறது. அது சென்னையிலிருந்து 1831-இல் வெளிவந்த மாத இதழ்; கிறிஸ்துவ மதப் பத்திரிகை.

 தமிழகத்தில் 1578-இல் புன்னைக்காயலில் முதல் முறையாகத் தமிழ் அச்சகம் தோன்றியதன் விளைவாக உருவானது பத்திரிகை உலகம். அதன் பின்னர்தான் நாளிதழ்களும் இதழ்களும் பெரும் அளவில் வெளிவரத் தொடங்கின: பிழைகளும் பிறமொழிச் சொற்களும் அதிக அளவில் அச்சில் இடம்பிடிக்கவும் தொடங்கின. கேட்டுப் பழக்கபட்டவர்கள் படித்து அறியப் பழக்கப்பட்டதால், சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் எழுதிச் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். சொல்ல வேண்டியதைப் பிழை இல்லாமல் எழுத்தில் கொண்டுவர இதழ்களும் நூல் வெளியிடுவோரும் முயற்சிகளை எடுத்தனர்.

""இலக்கணமும் இலக்கியமும் தெரியாதான் ஏடு எழுதுதல் கேடு நல்கும்'' என்ற பாரதிதாசன், கலைப் பண்பும் உயர்நினைப்பும் உடையவரே ஏடெழுதும் கணக்காயர்கள் என்று அவர்களுக்கான தகுதிகளையும் வரையறை செய்தார். இல்லையேல், பிழைப்புக்காக நடத்தப்படும் இதழ்கள் மொழியின் வாழ்நாளைச் சுருக்கிவிடும். திரு.வி.க. சொல்கிறார், ""தமிழைப்போல் உயர்ந்த மொழி தரணியெங்கும் கண்டதில்லை; தமிழரைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே''


எந்தச் சொல்லை எந்த இடத்தில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூல் (STYLE BOOK) ஒன்றை, ஆங்கில நாளிதழ் ஒவ்வொன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஆசிர்வாதம், ஞானப்பிரகாசம் என்போர் தயாரித்து 1952-இல் வெளிவந்ததாக அறியப்படும் பயிலும் தமிழ் எனும் நூல் தமிழ் இதழ்களுக்கான வழிகாட்டி நூலாகக் கருதப்படுகிறது. 1971-இல், "நாள் - தமிழ் எழுத்தாளர் கையேடு' ஒன்றை, சி.பா. ஆதித்தனார் தயாரித்துத் தந்துள்ளார்.


மொழியில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் பதிவு செய்யவும் பகிர்ந்துகொள்ளவும் உலக அளவில் P.E.N. (P Poets, Philosophers: E - Editors, Essayists; N-Novelists, Newspapermen) என்ற அமைப்பு உள்ளது. இதழ்களும் நூல்களும் படிப்பவர்களுக்குக் களைப்பு ஏற்படுத்தாமல், சொல்ல வேண்டிய செய்திகளையும் கருத்துகளையும் மனத்தில் சேர்க்கும்படி ஆக்கித்தரும் இர்ல்ஹ் உக்ண்ற்ர்ழ் பணிக்குத் தகுதியானவர்களை உருவாக்கிட இதழியல் துறைகளில் பாடத்திட்டம் சேர்க்கப்பட்டுப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன.



அச்சாகி வெளிவரும் ஒன்றின் அமைப்பு, நடை ஆகியவற்றை மேம்படுத்துவதும், செய்தி அல்லது கருத்தின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதும், என்ன சொல்கிறது என்ன சொல்ல நினைக்கிறது என்ற இரண்டிற்குமான இடைவெளியைக் குறைப்பதும், எழுத்துப் பிழை இலக்கணப் பிழைகளை நீக்குவதும் சொல்லாட்சியைச் சரிசெய்வதும் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதும் அவர்களின் பணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

 காப்பி எடிட்டர் இல்லாமல் உலக அளவில் பத்திரிகைகளோ வெளியீட்டு நிறுவனங்களோ இப்போது இல்லை எனும் நிலை உருவாகி வருகிறது. Copy Editor என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று வாசகர்கள் தெரிவித்துள்ளவை வருமாறு:

 மீனா.கண்ணன் - படி திருத்துநர்/ நகல் திருத்துநர்

 கு.இரவிச்சந்திரன் - நகலாசிரியர்/ நகலர்/நகல் பொறுப்பாளர்

 நா.முத்தையா - பதிப்புப் படி முழுமைப்படுத்துபவர்

 இராம. வேதநாயகம் - படி பதிப்பாளர்/ பிரதி படிப்பாளர்

 ராஜசிம்மன் - பிரதி பதிப்பாசிரியர்

 நா.கிருஷ்ணவேலு - பிரதி பார்த்து எழுதும் பதிப்பாசிரியர்/ நகலைப் பின்பற்றும் பதிப்பாசிரியர்

சோ.முத்துமாணிக்கம், இரா.மோகனசுந்தரம், பெ.கார்த்திகேயன் - நகல் பதிப்பாளர் -

ப.இரா.இராச அம்சன் - சீர்பகர்வு தொகுப்பி/ செம்மை படி திருத்தி

வெ.ஆனந்தகிருஷ்ணன் - நகல் பதிவர் / பொறுப்பாசிரியர்

என்.ஆர்.ஸத்யமூர்த்தி - செவ்வையாசிரியர்/ மெருகாசிரியர்

 கோ.மன்றவாணன் - பதிப்பாசிரியர்/ வடிவொழுங்கு ஆசிரியர் காப்பி எடிட்டர் என்போர் வெளியீட்டு நிலைக்கு ஒன்றை ஆக்கித் தருகிறார்கள்.

""வழுக் களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம்-அமைத்துக் கோடல்; நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசியாக்கினார் என்பவாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்க மாயிற்று என்றும் அமையும்'' என்று தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையர் கூறியுள்ளார். அதுபோல, பிழை களைந்து சொற்களையும் கருத்துகளையும் படிப்போர் மனத்தில் பதியும் வகையில் ஆக்கித் தருகிற காப்பி எடிட்டரை, பதிப்பாக்குநர் என்று சொல்லலாம். பதிப்பாசிரியர் என்பதைப்போல பதிப்பாக்குநரும் புழக்கத்திற்கு வரலாம். அவர் செய்யும் எடிட்டிங் பணியும் பதிப்பாக்கப் பணியாகலாம்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.