ads

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு


புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெறுகின்றது. புதுவைப் பல்கலைக்கழக அரங்கத்தில்  நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜெர்மனி, சுவிசர்லாந்து, இங்கிலாந்து சிங்கப்பூர், பிரான்சு, மலேசியா, இலங்கை, ஹாங்காங்கு, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட கணினி வல்லுநர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) என்ற பன்னாட்டு அமைப்பு புதுச்சேரி அரசின் ஆதரவுடன் இந்த மாநாட்டை நடத்துகின்றது. புதுவை முதலவர் ந. ரங்கசாமி மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார். புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றுகிறார்.
உலகத் தமிழ் இணைய மாநாட்டை ஒட்டி மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும், கணினி, இணைய ஆர்வலர்களும் கலந்துகொண்டு பரிசுபெறலாம். போட்டிகளின் விவரம் 1. வலைப்பூ உருவாக்கும் போட்டி. 2. தமிழ்த்தட்டச்சுப் போட்டி 3. கணினி, இணையச் செயற்பாட்டளர்கள் போட்டி.
வலைப்பூ(பிளாக்) உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், உத்தமம் அமைப்புக்கு மின்னஞ்சல் வழியாக எந்தப் பெயரில் வலைப்பூ (பிளாக்) உருவாக்க உள்ளோம் என்பதைச் இன்று  முதல் ஆகஸ்டு 31 க்குள் தெரிவித்து ஒப்புதல் பெறுதல் வேண்டும்.
தமிழ் மொழி, இனம், நாடு, மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், தொழில்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை, கலைகள் சார்ந்த பொருண்மைகளில் உள்ளடக்கம் கொண்ட வலைப்பூக்களை உருவாக்க வேண்டும்.
போட்டிக்கு உட்பட்ட காலத்தில் குறைந்த அளவு பத்துப் பதிவுகள் ஒவ்வொரு வலைப்பூவிலும் இடம்பெறவேண்டும்.
ஒருவரே பல வலைப்பூக்களை உருவாக்கலாம். உத்தமம் அமைப்பில் வலைப்பூத் தலைப்பு பதிவு செய்த பிறகு உருவாக்கும் வலைப்பூக்களே போட்டிக்கு உரியதாகக் கருதப்படும். கர்ஸ்ரீ2014000ண்ய்ச்ண்ற்ற்.ர்ழ்ஞ் என்ற மின்னஞ்சல் முகவரியில் தாங்கள் உருவாக்க நினைக்கும் வலைப்பூ தலைப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
வலைப்பூக்கள் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில் இருக்க வேண்டும். வலைப்பூவின் தலைப்பு தூய தமிழில் இருக்க வேண்டும். வலைப்பூவில் இடம்பெறும் செய்திகள் படம், ஓவியம், காணொளி (வீடியோ), வண்ண எழுத்துகளைக் கொண்டு மேம்படுத்தப் பட்டிருப்பது விரும்பத்தக்கது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பயன்படத்தக்க செய்திகள் வலைப்பூ உள்ளடக்கமாக இருக்கலாம். முன்பே பதிவிட்ட பதிவுகள் போட்டிக்கு உரியவை ஆகா. வலைப்பூ உள்ளடக்கச் செய்திகள் ஒவ்வொன்றும் இருநூறு சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். உத்தமம் உருவாக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. மற்றவர்களின் படைப்புகளைத் தம் படைப்பாகத் தரும் போட்டியாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் நிறுவனத்திலிருந்து சான்றிதழ் பெற்று அதனை, மின்வருடி(ஸ்கேன் செய்து) மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தம்மை மாணவர்கள் என்று உறுதி செய்துகொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டுக்குப் பரிசுபெற வருவோர் தம் சொந்தம் பொறுப்பில் வந்து செல்ல வேண்டும். பயணப்படிகள் தங்குமிட வசதிகள் இவர்களுக்கு இல்லை.
சிறந்த வலைப்பூ உருவாக்கும் போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும். அவை 1. பொதுமக்களுக்கான பிரிவு, 2. கல்லூரி மாணவர்களுக்கான பிரிவு, 3. பள்ளி மாணவர்களுக்கான பிரிவு. பொதுமக்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கான பிரிவில்மூன்று பரிசுகளும் வழங்கப்படும்(10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்).  பரிசு பெறாத அதேநேரத்தில்  சிறந்த வலைப்பூ உருவாக்கும் வலைப்பதிவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
பொதுமக்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்குப் புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி பெயரில் அமைந்த விருதும், பத்தாயிரம் பணமுடிப்புபும், சான்றிதழும் பரிசாக வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழுடன் வழங்கப்படும்.
கல்லூரி நிலையிலான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்குக் கணிஞர் ஆண்டோபீட்டர் நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் முதல் பரிசும் வழங்கப்படும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் சிறந்த வலைப்பூ உருவாக்கி முதல்பரிசு பெறுவோருக்குச் சிங்கப்பூர் ந. கோவிந்தசாமி நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
தமிழ்த் தட்டச்சுப் போட்டி:
மாநாடு நடைபெறும் நாளில் மக்கள் அரங்கில் உள்ள தன்னார்வலர்களின் முன்னிலையில் தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட சொற்களைப் பிழையின்றித் தட்டச்சுச் செய்துகாட்டி யாரும் நூல் பரிசுகளைப் பெறலாம். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் ஆர்வலர்களுக்கு முன்னணிப் பதிப்பகம் ஒன்று நூல்களைப் பரிசாக வழங்கும்.
கணினி இணையச் செயற்பாட்டாளர் போட்டி:
கணினி, இணையம் பயன்பாட்டுக்கு வந்த  பிறகு இவற்றின் வழியாகத் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் சிறந்த செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வல்லுநர் குழு  ஐந்து செயல்பாட்டாளர்களைத் தேர்வு செய்து அவர்களின் பெயரை மாநாட்டுக் குழுவிற்கு வழங்கும். அதன் அடிப்படையில் ஐந்துபேரும் புதுவைத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்படுவார்கள். தமிழ்க் கணினி, இணையச் செயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி இதுவாகும். மேலும் விவரங்களுக்கு
muelangovan000gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.