செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் சனிக்கிழமை மாலை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த ஒப்பந்தத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் வி.ஜி. பூமாவும், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலையும் கையெழுத்திட்டனர்.
பின்னர் பூமா தெரிவித்தது: இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கை அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவு. செவ்வியல் தமிழ் இலக்கணத்தில் உயரிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இந்த இருக்கை நிறுவப்பட்டுள்ளது. இதில், தமிழ் இலக்கியத்தின் பெருமைமிக்க தொன்மை இலக்கணமான தொல்காப்பியர் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆய்வுகள் மட்டுமல்லாமல் கற்பித்தல் நிலையிலும் இந்த இருக்கை இயங்கித் தொல்காப்பியத்தின் பெருமைகளை வெளிக்கொணரப்படும். இந்த இருக்கைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இலக்கண அறிஞர்கள் ஆய்வுக்கு வழிகாட்டல், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தல், ஆய்வு நூல்களை வெளியிடுதல், சொற்பொழிவுகளை நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர். இந்த இரு இருக்கைகளில் மேற்கொள்ளப்படும் இலக்கண ஆய்வுகள் 200 பக்கங்களுக்குக் குறையாமல் ஆண்டுதோறும் நூல் வடிவம் பெறும்.
இந்த இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், வரும் வட்டித் தொகை மூலம் செலவினங்கள் மேற்கொள்ளலாம். இது முதல் கட்டம். இதேபோல, தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இதுபோல அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை விரைவில் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம், திருக்குறள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் செம்பதிப்புகளாக முதலில் 41 செவ்விலக்கிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன. மேலும், 20 இலக்கியங்களிலிருந்து சொல்களைத் தொகுத்து தரவகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
திருக்குறளை மணிப்பூரி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூல் மார்ச் 13-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் பேசும் சந்தாலி மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழைப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆய்வு நிறுவனங்கள் என 20 நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்படும் என்றார் பூமா.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை தெரிவித்தது:
தொல்காப்பியத்தின் வீச்சு நவீன களம் வரை செல்ல வேண்டும். குறிப்பாக தொல்காப்பியத்தை வைத்து ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுத்தப்படும்.
மேலும், தொல்காப்பியம் பொருள் களஞ்சியம், பதிணெண்கீழ் கணக்கு பொருள் களஞ்சியம், திருக்குறள் பொருள் களஞ்சியம், மணிமேகலை பொருள் களஞ்சியம் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றார் திருமலை.
அப்போது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் மு. முத்துவேலு, தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் சே. கணேஷ்ராம், தனி அலுவலர் ந. அதியமான் உள்ளிóட்டோர் உடனிருந்தனர்.

0 comments :
கருத்துரையிடுக