ads

திருக்குறள்: தில்லியில் தேசியக் கருத்தரங்கம் ஜவாஹர்லால் நேரு பல்கலையில் மார்ச் 27-இல் தொடக்கம்


தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் கருத்துப் புலப்பாட்டு முறைகளும், அணி இலக்கணச் சிந்தனையும் என்ற தலைப்பில் மூன்று நாள் தேசியக் கருத்தரங்கம் மார்ச் 27-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய மொழிகள் மையம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (சென்னை) ஆகியவை இணைந்து இக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன. மொத்தம் 13 அமர்வுகள் இடம் பெறும். தொடக்க நாள் (மார்ச் 27) நிகழ்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

தில்லி பல்கலை.யின் நவீன இந்திய மொழிகள், இலக்கியத் துறையின் தமிழ்ப் பேராசிரியர் அ. மாரியப்பன் தலைமை வகிக்கிறார். அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் இந்திய மொழிகள் துறையின் தமிழ்ப் பேராசிரியர் து. மூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.

இதைத் தொடர்ந்து, பிற்பகலில் பண்பாட்டு அசைவில் திருக்குறளில் சில சொற்கள்: கருத்துப் புலப்பாடும் பொருள் மாற்றமும் என்ற தலைப்பில் தில்லி பல்கலை. தமிழ்ப் பேராசிரியர் கோவி. ராஜகோபால், திருக்குறளில் சொல் இயங்கும் முறைமைக் கூறுகள் என்ற தலைப்பில் இந்திய மொழிகள் மையத்தின் தமிழ் உதவிப் பேராசிரியர் த. நா. சந்திரசேகரன் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதையடுத்து, திருக்குறளில் அணிநலம என்ற தலைப்பில் கட்டுரை வாசிப்பு இடம் பெறும். இதில்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பி. ஆனந்த கிருஷ்ணன், ஜெ. மணிமாலா, பி. உமா, மு. முரளி ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை வாசிக்கின்றனர்.  
மார்ச் 28: இரண்டாம் நாள் நிகழ்வில் திருக்குறளில் நட்பியல் கோட்பாடுகள் என்ற தலைப்பில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் து. மூர்த்தி, இந்திய மெய்யியல் மரபில் திருக்குறள்: உடன்படுதலும், மாறுபடுதலும் என்ற தலைப்பில் தில்லி பல்கலை. தமிழ் உதவிப் பேராசிரியர் கே. பிரேமானந்தன் ஆகியோரின் சொற்பொழிவு நடைபெறும். இதைத் தொடர்ந்து திருக்குறள் கருத்துப்புலப்பாட்டு நெறிகள் என்ற தலைப்பில் கட்டுரை வாசிப்பு நடைபெறும். இளமுனைவர் பட்ட ஆய்வாளர் சு. அழுகு சுப்பையா, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ம.ராஜ்குமார், இரா. தமிழ்ச் செல்வன் ஆகியோர் கட்டுரைகளை வாசிக்கின்றனர். பிற்பகலில் திருக்குறள்: பிரெஞ்சு மொழியாக்க முறைகள் என்ற தலைப்பில் ஜவாஹர்லால் நேரு பல்கலை. பிரெஞ்சு மொழி மைய முனைவர் எஸ். ஷோபா, உதவிப் பேராசிரியர் அஜித் கண்ணா ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். இதையடுத்து, திருக்குறளில் அணிநலம் என்ற தலைப்பில் கட்டுரை வாசிப்பு இடம்பெறும். முனைவர் பட்ட ஆய்வாளர்கள் த. ஜெகதீசன், ச. முருகேசன், இளமுனைவர் பட்ட ஆய்வாளர் கு. திலகவதி, பேராசிரியர் எச். பாலசுப்பிரமணியம் ஆகியோர் உரையாற்றுகின்றனர். 

மார்ச் 29: மூன்றாவது நாள் நிகழ்வில் திருக்குறள் சொல், கருத்தியல் புலப்பாட்டு நெறிகளை ஆங்கில மொழியாக்கம் செய்கையில் எதிர்கொண்ட சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் மொழி பெயர்ப்பாளர் புலவர் விஸ்வாதன், திருக்குறளில் மேலாண்மையியல் கருத்துப் புலப்பாட்டு முறைகள் என்ற தலைப்பில் வழக்குரைஞரும், மேலாண்மைக் கல்விப் பயிற்றுநருமான மா. சேது ராமலிங்கம் ஆகியோர் உரையாற்றுகின்றனர். பின்னர் திருக்குறள் கருத்துப் புலப்பாட்டு நெறிகள் என்ற தலைப்பில் கட்டுரை வாசிப்பு இடம்பெறும். முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ரா. கண்ணன், கா. சிலம்பரசன், த. தினேஷ் ஆகியோர் கட்டுரைகளை வாசிக்கின்றனர்
இதைத் தொடர்ந்து, பிற்பகலில் நடைபெறும் அமர்வில் திருக்குறள் கருத்துப் புலப்பாட்டில் இல்பொருள் உவமை அணி தலைப்பில் முனைவர் தி. உமாதேவி, திருவள்ளுவர், வேமனா படைப்புகளில் சமூக நோக்கு - ஓர் ஒப்பீடு தலைப்பில் தெலுங்கு உதவிப் பேராசிரியர் ஜி. வெஙகடராமையா ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள் என்று ஜவாஹர்லால் நேரு பல்கலை. வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.