ads

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசிய தலாய் லாமா

திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால் 1959-ம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா(78), இங்கிருந்தவாறே சீனாவை எதிர்த்து திபெத்தின் விடுதலைக்காக போராடி வருகிறார். திபெத்தியர்களுக்கான நாடு கடந்த அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் அவர், சீனாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிக்க உலக நாட்டு தலைவர்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தொண்டினை பாராட்டி அமைதிக்காக வழங்கப்படும் உலகின் உயரிய நோபல் பரிசு தலாய் லாமாவுக்கு அளிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தலாய் லாமா நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசினார்.
முன்னதாக, தலாய் லாமாவுடனான ஒபாமாவின் இந்த சந்திப்புக்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் அமெரிக்க அரசை சீனா கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங், ‘திபெத் விவகாரம் சீனாவின் உள்நாட்டு பிரச்சினையாகும். இதில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது’.
மதத்தின் பெயரால் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தலாய் லாமாவை ஒபாமா சந்தித்து பேசுவது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களுக்கு நியாயமற்ற இடையூறை ஏற்படுத்தி விடும். அமெரிக்கா-சீனாவுக்கிடையிலான நட்புறவுக்கு இந்த சந்திப்பு ‘பெரும் சேதம்’ விளைவித்து விடும். சர்வதேச நாடுகளுக்கு இடையில் பேணப்பட வேண்டிய நல்லுறவு கோட்பாடுகளை மீறும் வகையிலான இந்த சந்திப்புக்கான ஏற்பாட்டை அமெரிக்க அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாத பராக் ஒபாமா, திட்டமிட்டபடி தலாய் லாமாவை சந்தித்து பேசினார். முக்கிய பிரமுகர்களை வழக்கமாக முட்டை வடிவ (ஓவல் ஷேப்) அலுவலகத்தில் சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், தலாய் லாமாவுடனான ஒபாமாவின் இந்த சந்திப்பு அவரது இல்லத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திபெத்தியர்களின் விடுதலைக்காக வன்முறையின்றி அமைதிப் பாதையில் தொண்டாற்றி வரும் அவரது நடுநிலை கொள்கையை ஒபாமா பெரிதும் பாராட்டினார். சீனாவில் வாழும் திபெத்திய மக்களின் சமய, கலாசார, மொழி சார்ந்த உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா பெருந்துணையாக இருக்கும் எனவும் ஒபாமா உறுதியளித்தார்.
இதற்கிடையே, சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க உயர் தூதரை வரவழைத்த சீன வெளியுறவு துறை மந்திரி இந்த சந்திப்புக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.