உயர்ந்த மலை நாட்டிற்கு உரிமை உடையவன் தலைவன். அந்த மலைநாட்டில் வாழும் சாதாரண குறவரின் மகள் தலைவி. தினைப்புனக் காவலுக்குச் சென்றவள் அங்கே அவனைக் காணுகின்றாள். உள்ளத்தில் அவன் உருவத்தைப் பதித்துவிட்ட அவள், தினமும் மனதிற்குள்ளேயே அவனை நினைத்து மகிழ்கிறாள். நேரில் அவனைக் காணத்துடிக்கிறாள்.
மீண்டும் தினைப்புனக் காவல் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்.
அந்த நாளும் வந்தது. தலைவனைக் காண நெஞ்சம் ஏங்கியது. யாரிடம் சொல்லி அவனைவரச்செய்வது? அவளைத் தவிர எவருமில்லாத அந்தத் தினைப்புன வனத்தில் அஃறிணை உயிரான பைங்கிளியைக் கண்டதும் உள்ளம் மகிழ்கிறாள்.
அந்தப் பைங்கிளியால் மட்டுமே தன்னுடைய நோய்க்கான மருந்தைக் கொண்டுவர இயலும் எனும் முடிவுக்கும் வருகிறாள். தினைப்புனத்தில் நின்றுகொண்டு அங்குத் தினைகளைக் கொய்ய வரும் கிளியை நோக்கி, "சிவந்த வாயை உடைய கிளியே! நீ தினைகளை உண்பதால் துன்பத்திற்கு ஆளாகிவிடுவோமே என்று அஞ்சாதே. முதலில் உன் பசி தீரவேண்டிய மட்டும் உணவை உண்டு விடு. உன் பசிக்குறை தீர்ந்த பின், என் உளக்குறை ஒன்றைத் தீர்க்க நீ முன்வர வேண்டும். என் இரு கைகளால் உன்னைத் தொழுது இரந்து வேண்டுகின்றேன்.
நீ உன் சுற்றத்தைக் காண பலாச்சோலை சூழ்ந்த இம் மலைச்சாரலின்கண் செல்லும்போது, அங்கு என் தலைவனைக் காண்பாய்; அவனிடம் முன்பு போலவே நான் தினைப்புனக் காவல் செய்துகொண்டிருக்கும் செய்தியை மட்டும் சொல்லி, அவன் வரவுக்காய் ஏங்கும் என் மனக்குறையைப் போக்குவாயாக' என்கிறாள்.
மாந்தரின் உள்ளத்து உணர்வை உள்ளது உள்ளபடி உரைக்கும் சங்கப் புலவர்களின் கவித்திறத்திற்குச் சான்றாகும் இப்பாடல், "செம்பியனார்' எனும் புலவரால் பாடப்பெற்று, நற்றிணையின் 102-ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.
கொடுங்குரல் குறைத்த செவ்வாய்ப் பைங்கிளி
அஞ்சலோம்பி ஆர்பதங் கொண்டு
நின்குறை முடித்தபின்றை என்குறை
செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல் பல்கோட் பலவின்சாரல் அவர் நாட்டு
நின்கிளை மருங்கிற் சேறியாயின்
அம்மலை கிழவோர்க்கு உரைமதி இம்மலைக்
கானக் குறவர் மடமகள்
ஏனல்காவல் ஆயினள் எனவே!
-முனைவர் ப.ஆனந்தநாயகி
நன்றி தினமணி


0 comments :
கருத்துரையிடுக