![]() |
| தஞ்சை சரஸ்வதி மஹால் |
தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதற்காக மாதந்தோறும் கதை கதம்பம் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற புதிய நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் சிறப்புப் பதிப்பாசிரியர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: உலகப் புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திலுள்ள ஓலைச் சுவடிகள், அரிய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். நூலகத்தில் ஏராளமான ஓலைச் சுவடிகள் கார்பன் போல் பதுங்கியுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கை வண்ணத்தால் அது, பட்டை தீட்டப்பட்டு வைரமாக மாற வேண்டும். இங்குள்ள ஓலைச் சுவடிகளை வைத்துக் கொண்டு எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம்.
இலக்கியம் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளுக்குரிய தகவல்களும் குவிந்து கிடக்கின்றன. அரிய தகவல்கள் புதைந்தள்ள சரஸ்வதி மகால் ஓலைச் சுவடிகளை மூடி வைக்கக்கூடாது. திறந்து வைத்தால் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவிகரமாக இருக்கும். ஆராய்ச்சியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் பொதுமக்களுக்கு அரிய தகவல்கள் சென்றடையும். இதற்காக மாதம் ஒரு கதை கதம்பம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு தலைப்பில் பேசுவர்.
சரஸ்வதி மகால் நூலகத்தில் நான்கைந்து மொழிகளில் ஓலைச் சுவடிகள் உள்ளன. மேலும், ஜெர்மன் மொழியிலும் நூல்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இவற்றுக்கு மொழி பெயர்ப்பாளர் இல்லை. இதற்கு உதவ யாரேனும் முன் வந்தால், அதிக தகவல் வெளி வரும். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்து தர நூலக நிர்வாகம் தயாராகவுள்ளது.
ஆண்டுதோறும் தமிழ், மாராட்டி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஓலைச்சுவடி பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து காலாண்டு இதழ் வெளியிடப்படும் என்றார் சுப்பையன்.
விழாவில் பஞ்சதந்திரம் - செய்யுள் என்ற புதிய நூலையும், சித்த மருத்துவச் சுடர், நட்சத்திர சிந்தாமணி இரண்டாம் பாகம், சமாதிலிங்க பிரதிஷ்டை, கர்ப்பிணீ ரஷை, ஆகம தீஷாவிதி, சாணக்கிய நீதி சமுச்சயம் ஆகிய மறுமதிப்ப நூல்களையும் ஆட்சியர் வெளியிட்டார்.
விழாவில் சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலர் ம. சங்கர நாராயணன், மனநல மருத்துவர் கே. தியாகராஜன், சரஸ்வதி மஹால் நூலகர் எஸ்.சுதர்சன், கலைக்கூட காப்பாட்சியர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் செல்லாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


0 comments :
கருத்துரையிடுக