ads

காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருப்பவை தமிழ் இலக்கியங்கள் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேச்சு

காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருப்பவை தமிழ் இலக்கியங்கள் தான், என எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் தெரிவித்தார்.

மதுரைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற உரைஅரங்கத்தில் வாசிப்பும், சுவாசிப்பும் என்ற தலைப்பில் அவர் பேசியது:

தமிழ் எழுத்துக்களில் வாழ்க்கையை புதைத்து வைத்துள்ளனர் நம்முன்னோர்கள். தமிழை வாழ்க்கையோடு தொடர்பு படுத்திக் கொண்டிருந்தனர். தமிழை வாசித்து நேசித்து வந்தனர்.
இன்றைக்கு உலகம் சுருங்கி, கைபேசிகள் மூலம் உள்ளங்கையில் வந்துவிட்டது. இவை இன்றைய இளைஞர்களை மேம்பாடுத்துகிறதா, பிரச்னைகள் வரும்போது எதிர்கொள்ளும் ஆற்றலை இது தருமா என்றால், வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால் தான் சாதிக்க முடியும்.
தமிழ் வாசிப்பை தவமாக போற்றிய பெரியவர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில் வாழ்கிறோம். பேரறிஞர் என போற்றப்படும் அண்ணா, முதல்வராக இருந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக நேரம் குறிக்கப்பட்டது. இந்த நிலையில், புத்தகம் படிப்பதற்காக 2 நாள்கள் ஒதுக்க அவகாசம் கேட்டு, தனக்கான அறுவை சிகிச்சையை தள்ளி வைத்த அறிஞர் அவர். அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கியவாதி அவர்.

இந்திய குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தபோது, தனக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்த அரசு இல்லத்தை விட்டு வெளியேறி, தனது ஆசிரியர் இல்லம் நோக்கிச் சென்றார். பாதுகாப்பு வீரர்கள் ஓடிச்சென்று கேட்டபோது, இங்கே எல்லாம் இருக்கிறது. ஆனால், நான் வாசிக்க புத்தகங்கள் இல்லை. அருகிலுள்ள எனது ஆசிரியர் இல்லத்திலுள்ள நூலகத்துக்குச் செல்கிறேன் எனறு கூறி, புத்தக வாசிப்பில் தனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியவர் அவர். இதேபோன்று போர்த்துகீச்சியரான வீரமாமுனிவர், தமிழின் பெருமையை உணர்ந்து, சிரமப்பட்டு தமிழமைக் கற்றதோடு, தமிழ் மொழிக்குள் சீர்திருத்தம் செய்யும் திறனையும் வளர்த்துக் கொண்டார். மகாபெரியவர் காஞ்சி மாமுனிகள் ஏற்க மறுத்தும் பக்தர்கள் தந்த தங்க கிரீடத்தை ராஜராஜசோழனுக்கு உரியது என்றார். ராஜராஜசோழன் இல்லாவிட்டால், நமக்கு பெரியபுராணம் கிடைத்திருக்காது என்றார் காஞ்சிப்பெரியவர்.

இப்படி முனிவர்கள் முதல் நாடான்டவர்கள் வரை வாசிப்புக்கும், நூலுக்கும் முதலிடம் கொடுத்து வந்துள்ளனர். எத்தனையோ கோடீஸ்வரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் காலம் நினைப்பதில்லை.எழுதி வாசிப்பவரை உலகம் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்கள் தான் காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன.தலை கொடுத்து தமிழைக் காத்த ஒட்டக்கூத்தன் போன்றவர்கள் வாழ்ந்த நம்மண்ணில், இக்கால இளைஞர்கள் தமிழை வாசிக்க, நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உடலில் உயிர் இல்லை என்றால் பிணம், தமிழை வாசிக்கவில்லை என்றால் மனமும் பிணம்தான், என்றார்.

நன்றி: தினமணி
Share on Google Plus

About blog.kalaisolai.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.